இந்திய ஆராய்ச்சியாளரின் வேண்டுகோள்
சர்வதேச ஹிஜ்ரா நாட்காட்டியை முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்தி அனைவரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட உதவ வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமைப்புக்கு அலி மனிக்ஃபான் என்ற இந்திய ஆராய்ச்சியாளர் கேட்டுக்கொண்டார்.
இந்திய ஹிஜ்ரா கமிட்டியின் (கோழிக்கோடு) அமைப்பாளரான அவர், புனித உம்ரா பயணத்திற்கிடையில் மக்காவின் நுழைவாயில் எனப் போற்றப்படும் ஜித்தா நகரில் நடைபெற்ற பல பத்திரிக்கை சந்திப்புகளிலும், பல்வேறு பிறை கருத்தரங்குகளிலும் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் தேதி புனித மக்கா நகரில் நடைபெறவிருக்கும் 57 உறுப்பினர்களைக் கொண்ட OIC (Organization of the Islamic Conference) – யின் இரண்டு நாள் மாநாடு நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அலி மனிக்ஃபான் அவர்களின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆராய்ச்சியாளர் அலி மனிக்ஃபான் அவர்கள் மேலும் கூறும்போது,
உலக முஸ்லிம்கள் கடந்த நோன்புப் பெருநாளை வியாழன், வெள்ளி, சனி என மூன்று வெவ்வேறு நாட்களில் கொண்டாடியது வேதனைக்குரியது. அறிவியல் முன்னேறிய காலக் கட்டத்திலும் மாசுகள் நிறைந்த விண்ணில் வெற்றுக் கண்ணால் பிறையைப் பார்த்துதான் ஹிஜ்ரா தேதியை முடிவெடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தவில்லை. இதே நிலையில் போனால் இனிவரும் காலங்களில் 7 வித்தியாசமான கிழமைகளில் உலக முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் நிலைமை ஏற்படலாம். பிறையைப் பார்த்து நோன்பிருங்கள் பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற நபிமொழி, தவறாக விளங்கிப் பின்பற்றப் படுகிறது என்றார்.
அவருடைய கருத்துகளைப் பல்வேறு குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளோடு விஞ்ஞான விஷயங்களையும் மேற்கோள் காட்டிப் பேசியது பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது.
ஹிஜ்ரா நாட்காட்டியின் அனைத்து வகை விபரங்களும், கருத்துகளும், சந்தேகங்களுக்கு பதில்களும் ஹிஜ்ரா கமிட்டியின் இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. தொழுகையின் நேரத்தை விஞ்ஞான முறைப்படிப் பல வருடங்களுக்குக் கணக்கிட முடிந்ததுபோல், சந்திரனின் சுழற்சி மற்றும் இருப்பிடங்களைக் கணக்கிட்டு ஹிஜ்ரா நாட்காட்டி உருவாக்க முடியும். பல வருடங்களுக்குப் பிறகு வரும் சந்திர, சூரிய கிரகணங்களை, சந்திரன் மற்றும் சூரியனின் சுழற்சியை வைத்துக் கணக்கிட முடிந்ததற்கு காரணம் அதன் சுழற்சிகள் திட்டவட்டமான பாதையில் நிகழ்கின்றன. எனவே, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து சுமார் 100 வருடத்திற்குரிய ஹிஜ்ரா நாட்காட்டியைத் தாம் தயாரித்து இருப்பதாகத் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பெருநாள் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்விக்கு -ஒரே கிழமையில்- என்றார். ஒரே (ஹிஜ்ரி) தேதி வெவ்வேறு (நாட்டுக்கு) மூன்று கிழமைகளில் வருவது அறிவுக்கு ஏற்றதா? என்ற கேள்வியை மக்கள்முன் வைக்கிறார் அலி மனிக்ஃபான் அவர்கள்.
சர்வதேச கிழமை கோட்டிலிருந்து (Internation Date line) கிழமையும் தேதியும் ஆரம்பமாகிறது. எனவே அந்தக் கிழமையை அடையும் அனைத்து நாட்டுக்கும் ஒரே தேதியாகத்தான் இருக்க முடியும் என்றார் அவர்.
சந்திரனின் இருப்பிடங்களை தொடர்ந்து மூன்று மாதம் ஒருவர் கவனித்தால், தற்போது முஸ்லிம்கள் பின்பற்றும் ஹிஜ்ரா தேதி முறையில் உள்ள குளறுபடிகளைக் கண்டு கொள்வார். ஒவ்வொருவரும் சந்திரனின் சுழற்சியைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ரமலான் மாதம் மட்டும் பிறையைக் கணக்கிடும் மாதம் அல்ல, மாறாக ஹஜ் மற்றும் அதனைச் சார்ந்த புனித மாதங்கள் சரியாகக் கணக்கிடப்பட வேண்டியவையாகும் என்றார்.
பிறை பார்க்கும் விஷயத்தில் கடந்த காலங்களில் தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் அத்தவறுகளை காலம் முழுவதும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மாலத்தீவில் செல்வாக்கு மிக்கப் பூர்வீகத்தைச் சேர்ந்த இவரின் ஆராய்ச்சிகளைப்பற்றி இணையத்தில் விபரமாகக் காண முடிகிறது. இவர் ஆங்கிலம், அரபி, லத்தீன், ஃபிரெஞ்ச், ரஷ்யன், ஜெர்மன், பாரசீகம், சமஸ்கிருதம் என 16 மொழிகளை அறிந்து வைத்திருக்கிறார். இவரின் தாய்மொழி தமிழ் இல்லையென்றாலும் தமிழ் மொழியினர் ஏற்பாடு செய்திருந்த பிறை கருத்தரங்கில் தமிழிலேயே தெளிவாக உரையாற்றியதும் கேள்விகளுக்கு அவரவர் கேட்ட மொழியிலேயே பதில் சொன்னதும் வியப்பைத் தந்தது. நேரடியாக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தபோது அவருக்குத் தமிழ் படிக்கவும் தெரியும் என்பதை அறிந்துக் கொள்ள முடிந்தது. பன்மொழி அறிந்தவராக இருப்பதால் பல மொழிகளிலும் இவரது நிகழ்ச்சிகள் ஜித்தாவில் நடந்தன.
அலி மனிக்ஃபான் வானியல் தவிர்த்து உயிரியல், புவியியல், கப்பல் கட்டுமானம், கல்வி, மீன்பிடி, விவசாயம் எனப் பல துறைகளில் கை தேர்ந்தவர். தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இவரின் ஆராய்ச்சிப் பண்ணை உள்ளது. இதன் பெயர் Do nothing farm என்பதாகும்.
1200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகப் பேசப்படும் சிந்துபாத் அரபிக் கதைகள், ஓர் உண்மை நிகழ்வாக, வாழ்ந்து மறைந்த ஒரு கடல் பயணியின் அனுபவத்தை மையமாகக் கொண்டது என்ற ஒரு கருத்து எழுந்தபோது, சிந்துபாத்தின் கப்பல் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற முடிவு பெறப்பட்டு, அக் கப்பலை வடிவமைக்கும் பணிக்கு அலி மனிக்ஃபான் பரிந்துரைக்கப்பட்டார்.
சிந்துபாத் கப்பலை அவர் ஓமானில் (Oman) வடிவமைத்தார். அந்தக் கப்பல் சுமார் 9600 கி.மீட்டர் ஓமனிலிருந்து சீனாவுக்குப் பயணம் செய்தது. தற்போது அது மக்கள் பார்வைக்காக ஓமன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் கண்டுப்பிடித்த அரியவகை மீன் இனத்திற்கு இவரின் நினைவாக -அபு தெஃப்துஃப் மனிக்ஃபானி- என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
40 வருட வானியல் ஆராய்ச்சியின் வாயிலாக உருவாக்கப்பட்ட சர்வதேச ஹிஜ்ரா நாட்காட்டியை இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமைப்பு அங்கீகரித்து முஸ்லிம் நாடுகளுக்கும், உலக முஸ்லிம்களுக்கும் அறிமுகப்படுத்துமா..?
பொறுத்திருந்து பார்ப்போம்.
- அபூ உமர்
செய்திஅலைகள்.காம்
தொடர்புடைய சுட்டிகள்
http://www.maldivesroyalfamily.com/minicoy_ali_manikfan.shtml
http://www.hijracalendar.com
http://www.islamkalvi.com/general/eid.htm
and Arab News Link
We look forward to hear good news about this information. Ramadan Eid and Hajj Eid should be celebrated world wide on the same day and it should be proved thru quranic words, or otherwise, we may be held responsible for aakirath.
A very useful research of this time.
This is what we all muslim makkal expect from Muslim World. We need one arabic calender and we have to follow this. So no more confussion in our muslim world regarding shawwal cressent moon and Ramadan moon sighting. Can we hope any usefulthing come out this December -7th conference in Mecca, Saudi Arabia??