தமிழ்நாடு-கும்பகோணம் தனியார் பள்ளிக்கூடத்தில் தீவிபத்து, 90 குழந்தைகளைக் கொன்றது.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்தது நாடுமுழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளின் திகைப்பூட்டும் நிலையை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் பதினைந்து ஆண்டுகால சந்தை சீர்தீருத்தங்களின் விளைபயன்களுள் ஒன்றாகும். இச்சீர்திருத்தங்கள் ஏற்கெனவே போதாதிருக்கின்ற பொதுக் கல்வி முறையைத் தொடர்ந்து சீரழிவுக்கும், மட்டரகமான மற்றும் பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படாத கட்டிடங்களில் வழமையாய் கூட்ட நெரிசலில் மிகுந்த தனியார் பள்ளிக்கூடங்கள் பல்கிப் பெருகுதலுக்கும் வழி வகுத்திருக்கிறது.

இவற்றில் ஒன்றுதான் தமிழ்நாடு – கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளிக்கூடம், கடந்த ஜூலை 16ம் தேதி பகல் 11 மணியளவில் தீப்பற்றிக் கொண்டது. 6 வயது முதல் 14 வயதுவரையிலுள்ள குறைந்த பட்சம் 800 குழந்தைகள் மூன்று அடுக்குக் கட்டிடத்தில் அடைக்கப்பட்டிருந்தினர். அவற்றில் பெரும்பாலானவை நீண்ட, குறுகலான ஒரேயொரு வெளியேறும் வழியுடன் கூடிய வகுப்பறைகளாகும். தரைத்தளத்தின் மீது அமைந்த சமையலறை உள்பட, கட்டிடத்தின் ஒரு பகுதி ஓலைக் கூரையினால் வேயப்பட்டிருந்தது.

போலீஸ் மற்றும் நேரில் பார்த்தவர்களின் கருத்தின்படி, மதிய உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் சமையலறையில் தீப்பற்ற ஆரம்பித்தது. ஓலைக் கூரையில் தீப்பற்றி, அது விரைவில் கட்டிடத்தின் ஏனையப் பகுதிக்குப் பரவியது. அனைத்து ஆசிரியர்களும், வயதில் மூத்தக் குழந்தைகளும் ஒருவாறு தப்பித்துக் கொண்டனர், 190 பிஞ்சுக் குழந்தைகள் இரண்டாவது தளத்திலுள்ள ஒற்றை வகுப்பறையில் வெளியேறும் ஒரே வழியும் தீச்சுவைலையினால் அடைபட்ட பின்னர் மாட்டிக்கொண்டனர்.

தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்னரே, உதவிக்காக அழுது கதறிக் கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உள்ளூர் ஆட்கள் விரைந்தனர். சம்மட்டிகளைப் பயன்படுத்தி சுவரில் அவர்கள் துளையிட்டனர், அறைக்குள் தண்ணீரைப் பாய்ச்சி இறுதியில் வகுப்பறைக்குள் நுழைய போதுமான அளவு இடைவெளி உருவாக்கினர். சில குழந்தைகளை அவர்கள் காப்பாற்றினார்கள், ஆனால் அறையின் ஒரே வழிக்கு அருகில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் குவியலாகக் கிடந்ததைக் கண்டனர். மொத்தம் 46 சிறுவர்களும் 44 சிறுமிகளும் இறந்தனர். மற்றும் 23 குழந்தைகள் கடுமையாய் காயமடைந்தனர்.

இரு வசிப்பிடக் கட்டிடங்களுக்கு இடையே அமைந்த பள்ளியை அடைய முடியாத வகையில் இருந்ததால் தீயணைப்பும், மீட்பு நடவடிக்கையும் தடைபட்டன. அது ஒரேயொரு நுழைவாயிலையும், ஒற்றைப் படிக்கட்டுக்களையும் கொண்டிருந்தது. சரியான வழிகளை அடைவதற்கு தீயணைக்கும் படையினர் கிரேன்களின் உதவியுடன் சுவர்களை உடைக்க வேண்டியிருந்தது. நேரில் பார்த்த சாட்சிகளின் படி, தீயணைப்பு வண்டியில் போதுமான தண்ணீர் இல்லாதிருந்தது மற்றும் பல கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஒரு குளத்திலிருந்து அதிகம் நீரை சேகரிக்க வேண்டியிருந்துது.

அந்தப் பள்ளிக்கூடம் அத்தகைய நிலையில் பல சகாப்த்தங்களாக இயங்கிக் கொண்டிருக்க முடிந்துது என்ற உண்மை அடுத்தடுத்து வந்த மாநில அரசாங்கங்களின் நேரடிப் பொறுப்பாகும். பள்ளிகளில் ஓலைக் கீற்றுக்களால் கூரை அமைந்திருப்பது சட்ட விரோதமாக இருப்பினும், இந்நடைமுறை பரவலாக உள்ளதும் பெரும்பாலும் அலட்சியப் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது ஒரு நெருப்புப் பொறிக்கிடங்காக தெளிவாக இருந்தபொழுதே, ஜனவரியில் அண்மையில் பள்ளிக்கூடத்தின் உரிமம் புதுப்பிக்கப்பட்டிருந்தது கண்டு பெற்றோர்களும், உள்ளூர்வாசிகளும் கோபமடைந்தனர். மாநிலத்திலேயே முதலாவதாக வர விரும்பிய என் மகனை அவர்கள் கொன்று விட்டார்கள் என மஞ்சுளா எனும் தாய் பத்திரிகையாளரிடம் கூறினார்.

தீ விபத்துத் தொடர்பான பொதுமக்களின் கோபத்தை திசை திருப்பும் முயற்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இத்துயரத்திற்கு பள்ளிக்கூட நிர்வாகத்தையும், கல்வித்துறையையும் உடனடியாகக் குற்றம் சாட்டினார். மாவட்ட அளவிலான கல்வித்துறையின் நான்கு அதிகாரிகள் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டனர் மற்றும் பள்ளிக்கூட அனுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிமையாளர் புலவர் பழனிச்சாமி, அவரது மனைவி, மகள், மற்றும் இரு சமையல்காரர்கள் உள்பட பள்ளிக்கூடத்தின் ஐந்து பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடமையில் தவறி மனிதக்கொலை புரிதல் மற்றும் ஏனைய குற்றவியல் நடவடிக்கைகளின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டனர்.

மாநிலக் கல்வி அமைச்சர் சி.வி சண்முகம் ஓலைக் கூரையுடன் உள்ளப் பள்ளிகளில் வகுப்புகள் ஒருவாரக் காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அத்தகையக் கட்டமைப்பை மாற்றும்படியும் அல்லது மூடுவதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது என்று அறிவித்தார். கட்டளை வலியுறுத்தப்படுவது பெரும்பாலும் விரும்பத்தகாதாய் இருக்கிறது. ஒரு முன்னாள் கல்வி அதிகாரி இந்து நாளிதழில் விவரித்தவாறு, அத்தகைய நடவடிக்கை மாநிலத்தின் 75 சதவீத தொடக்கப்பள்ளிகளை மூடுவதற்கு வழிவகுக்கும்.

மேலும் சிரீகிருஷ்ணா பள்ளியில் அமைந்த ஓலைக்கூரையே பாதுகாப்புப் பற்றாக்குறையின் மிகவும் பளிச்சிடும் ஒன்றாகும். கட்டிடத்தில் தீக்குத் தப்பித்தல் மற்றும் வெளியேறும் வழிகள் மற்றும் தீயணைப்புக் கருவிகள் உட்பட மிகவும் அடிப்படைப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கூட இல்லாதிருந்தது. பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கிற அதேவேளை, அது அருமையாகத்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கையாளுவதற்கு வசதியான பலியாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான அவசரத்தில், அரசு நிர்வாகிகளும் பத்திரிகைகளும் கூட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தவறிவிட்டனர் என்று ஆசிரியர்களின் மேல் குற்றஞ்சாட்ட முயற்சிக்கின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஜே. ராதாகிருஷ்ணன் அனைத்து 24 ஆசிரியர்கள் மீதும் -பணியில் கடமை தவறியதாக- குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். செய்தி ஊடகத்தால் நடத்தப்படும் வேட்டையாடலுக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சியும், ஆசிரியர்கள் தங்களின் வீடுகளை விட்டு ஓடிவிட்டனர்.

ஆயினும் விரைந்து பரவிய தீயால் உண்டு பண்ணப்பட்ட குழப்பமான சூழ்நிலைகளில் ஆசிரியர்கள் என்ன செய்திருக்கவேண்டும்,அல்லது உண்மையில் என்ன செய்திருக்க முடியும் என்பது தெளிவாக இல்லை. ஒருவர் கூட நெருப்பை எப்படி அணைப்பது என்பது தொடர்பாக எவ்வித பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. அங்கு நிலைப்படுத்தப்பட்ட தீயணைப்புப் பயிற்சி இல்லை மற்றும் தீயணைக்கும் கருவியும் இல்லை. ஆசிரியர்கள் மேல் குற்றம் சுமத்த குவிமையப்படுத்துவது பள்ளிக்கூடத்தின் உரிமையாளர். கல்வித்துறை நிர்வாகிகள் மற்றும் அரசாங்கத்தை தொல்லையிலிருந்து விடுபட்டு எளிதில் தப்பிக்க வைப்பதாகும்.

சீரழிந்து வரும் பள்ளிக்கூட முறைகள்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் கோபத்தைத் தணிப்பதற்கான மற்றும் துயரம் தொடர்பாக கவலை தெரிவிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலாநிதி மாறன் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். அவர் செய்தி ஊடகத்திடம் மாநில அரசாங்கத்திற்கு புது டெல்லியிலிருந்து உதவி தேவைப்படும் என நான் நினைக்கவில்லை என்று கூறினார், மேலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான் நமக்குத் தேவை, என்றும் கூறினார். போதுமான சோதனை இல்லாமை உட்பட, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களின் நிலைமைகளுக்கு ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு போலவே தற்போது மாநில அளவில் எதிர்கட்சியாக இருக்கிறது என்றாலும் தி மு க வும் பொறுப்புடையதாகும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்தைப் பார்வையிட்டார், பாதிக்கபட்டோர் குடும்பங்களுக்கு பத்து மில்லியன் ரூபாய்கள் மதிப்புள்ள ஒரு சிறப்புப் பொதியினை அறிவித்தார் மற்றும் பள்ளியின் உணவு மையங்களில் ஓலைக் கூரைகளை மாற்றி சரியான ஒன்றை அமைப்பதற்காக மற்றுமொரு 25 லட்ச ரூபாயை வழங்குவதாக அறிவித்தார். ஆயினும் இந்தக் குறைவான உதவிகள் இதற்குப் பின்னே உள்ள காரணங்களை எந்த விதத்திலும் கவனிக்கவில்லை.

1990களின் ஆரம்பத்தில் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறு சீரமைப்புத் திட்டத்தின் ஒருபகுதியாக அரசாங்கப் பொதுப்பள்ளிகள் அமைப்பு முறையானது முறைப்படுத்தப்பட்ட வகையில் குறைக்கப்பட்டு வந்திருக்கின்றது மற்றும் பின்னர் பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழ் அது நீட்டிக்கப்பட்டது. கல்விக்கு அரசாங்கம் செலவழிப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 சதவீதமாக வீழ்ச்சியுற்றிருக்கிறது, இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததில் ஏறத்தாழ அரைப்பகுதியாகும். இதன் விளைவாக பொதுப் பள்ளிக்கூடங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் பல இல்லாமல் இருக்கின்றன, அல்லது பள்ளிகளே இல்லாமல் இருக்கின்றன.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக முதலாளித்துவ தனியார் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். சிலவகைகளில் இந்தப் பள்ளிக்கூடங்கள் ஆங்கிலத்தில் கற்பிப்பது – தங்களின் குழந்தைகள் நல்ல சம்பளம் உள்ள வேலைகளைப் பெறுவதற்கு ஆர்வம் கொண்டுள்ள பெற்றோர்களுக்கான கூடுதல் ஊக்கமாக இருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடங்கள் பல தெளிவாகவே தேவைக் குறைவுகளைக் கொண்டிருக்கின்றன, முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே 13,000 தனியார் பள்ளிக்கூடங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

பிபிசி செய்தி அறிக்கைக் குறிப்பிடுகிறது மாவட்ட நகரங்களில் உள்ள இந்தியாவின் தனியார் பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையானவை மந்தமானதாக, ஒதுக்குப்புறம் என்றாலே அஞ்சக்கூடியதாக, நெரிசல் மிக்கதாக மற்றும் தீ பாதுகாப்பு முறைகள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் இல்லாத பெரும்பாலும் கைவிடப்பட்ட கட்டமைப்புக்களாக இருக்கின்றன. மாவட்ட நகரங்களிலுள்ள பெரும்பாலான இந்தத் தனியார் பள்ளிக்கூடங்கள், பள்ளங்கள் நிறைந்த, நெரிசல் மிகுந்த ஒடுக்கமான சந்துகளில், மற்றும் குறுக்குச் சந்துகளில் அமைந்திருக்கின்றன. பள்ளி நிர்வாகிகள் வகுப்புகள் தொடங்கியதும் குழந்தைகள் போக்குவரத்தில் சிக்கிக் கொள்ளாதிருப்பதற்காக அடிக்கடி வாயிற்கதவுகளைப் பூட்டிவிடுகின்றனர்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், மாநில அரசின் பாடத்திட்ட வழிகாட்டு முறையில் இணைந்துள்ள அப்படிப்பட்ட ஆங்கிலம் பயிற்றுமொழிப் பள்ளிக்கூடங்கள், இரவோடிராவான நடவடிக்கைகளாக இருக்கின்றன. அவர்கள் வாடகைக் கட்டிடங்களில் சிறியப் பள்ளிக்கூடங்களைத் திறக்கிறார்கள் ஆண்டுக் கட்டணங்களை வசூலித்ததும் நிர்வாகிகளும் ஆசிரியர்களும் மறைந்து விடுகிறார்கள். 1972 யொட்டிய காலப் பகுதி முதல் அத்தகைய ஆங்கில வழிப்பள்ளிகள் இருந்திருந்தாலும், விதிமுறைகள் கண்டிப்பில்லாததாக இருந்து வருகின்றன, மிக அண்மையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் வரை தமிழ்நாட்டில் அத்தகைய பள்ளிக்கூடங்களுக்கு நான்கு ஆய்வாளர்களே இருந்தனர்.

இந்து பத்திரிகையில் வந்த ஒரு ஆசிரியத் தலையங்கம் கல்வி அமைப்பு முறையின் நிலை பற்றி வருந்தத்தக்க முறையில் கூறுகிறது- அனைவருக்கும் ஆரம்பக் கல்வியென ஆக்குதலுக்கு அரசிற்கு அப்பால் சுதந்திரமான மாபெரும் முன் முயற்சியும் அதிகப் பள்ளிக்கூடங்களும் நிச்சயம் தேவைப்படுகின்ற வேளையில். அரசாங்கங்களின் தற்போதைய போக்கானது தேவைப்படும் வளங்களை ஒதுக்கத்தவறுவதுடன், சிறப்பாக ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவதில், வசதியான உட்கட்டமைப்பை வழங்குவதில், மற்றும் கற்றலின் தரத்தை உயர்த்துவதற்கானதில் கையை உதறுவதாகவும் இருக்கிறது.

மாறாக மூலை முடுக்குகளில் கல்விக்கூடங்கள் நிறுவ, தண்டனையிலிருந்து விலக்கீட்டு உரிமையுடன் சட்டங்களையும் விதிமுறைகளையும் காற்றில் பறக்க விடுவதற்கு பகிரங்க பொது உரிமம் கொடுக்கப்படுகிறது. கல்வி முறையில் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வகையிலான நம்பகத்தகாத செயல்பாட்டாளர்கள் பூத்துக் குலுங்குவதை ஊழல் சாத்தியமாக்குகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்துகொள்வது நிச்சயமாக குறைந்த செலவிலான தரமானக் கல்விக்கான வழி ஆகாது. பள்ளிக் குழைந்தைகளைக் கவனத்தில் கொள்ளும்போது, அத்தகைய சமரசமானது ஒன்றும் செய்யாதிருப்பதை விடவும் மோசமானதாகும்.

பத்திரிகையானது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய 2 சதவீதச் சுங்க வரி இந்தப் பிரச்சனைகளைக் கவனிக்கப் பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ஆனால் ஓலைக் கூரையை மாற்றுவதற்கு சோனியா காந்தி உதவுவது போல, ஆண்டுக்கு 40 – 50 பில்லியன் ரூபாய்கள் (சராசரியாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் புதிய வரி, கடலில் ஒரு சொட்டுக்கும் அதிகமானதாகும். அது அனைத்துப் பள்ளிக் குழைந்தைகளுக்கும் சமைக்கப்பட்ட சத்துள்ள மதிய உணவுக்கு ஒதுக்கப்படும் தொகை உள்பட, அடிப்படைப் பொதுக் கல்விக்கான ஒரு அடையாள முத்திரையாகும்.

கும்பகோணம் தீவிபத்து பற்றி அக்கறைப்படும் தற்போதைய அனைத்து வெளிப்படுத்தல்களையும் பொறுத்தவரையில், உடனடிக் கோபம் தணிந்து போன உடனேயே, மாநிலம் மற்றும் தேசிய அளவில் உள்ள அரசியல்வாதிகள், பிரச்சனையை விரைவில் கைவிட்டுவிடுவார்கள். ஜனவரி மாதம் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர்கள் இறந்த பின்னர், தமிழ்நாடு மாநில அரசாங்கம் அனைத்துப் பொதுக் கட்டிடங்களிலும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் மற்றும் நீர் தெளிக்கும் முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள எண்ணற்ற ஏனையக் கட்டிடங்களுடன் சேர்ந்து, கும்பகோணத்தில் உள்ள சிரீகிருஷ்ணா பள்ளிக்கூடமும் ஒன்றும் செய்யவில்லை என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

-ஆனந்தன்

www.seidhialaigal.com

Leave a Reply

You must be logged in to post a comment.