மக்கள் தொகை – மாறிவரும் நிலைப்பாடுகள்.

நாட்டின் மிக முக்கியப் பிரச்னையாகவும் – பிற பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாகவும் இந்திய அரசாலும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுவது மக்கள் தொகைப் பெருக்கம் ஆகும். இதையே மீடியாக்களும் முடிந்த அளவுக்கு ஊதிக்கொண்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஊழல்வாதிகளும், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத அரசியல் சட்டஅமைப்பும் ஒளிந்து கொள்வதற்குக் கிடைத்த உதவாக்கரை காரணம் தான் மக்கள் தொகைப் பெருக்கம் என்று நிரூபிக்கும் முகமாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பகத் தலைவர் ஏ.ஆர். நந்தா டெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றை தினமலர் (12 ஜூலை) நாளிதழ் வெளியிட்டுள்ளது.

பொதுவாக மக்கள் தொகைப் பெருக்கம் என்பது ஒரு நாட்டின் முக்கிய பிரச்னையாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும் அதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனால், மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் கூறப்படுகிறது. அது தவறு.

இந்தியாவில் 100 கோடிக்கும் மேல் மக்கள் உள்ளனர்.அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவுக்குத்தான் இரண்டாம் இடம்.ஆரம்ப சுகாதார வசதிகளை அதிகரிக்காமல், குடும்பக்கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்காமல் உடனடியாக மக்கள் தொகையை கடுமையாக கட்டுப்படுத்துவது சரியல்ல.

சமூக மற்றும் கலாச்சார மேம்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், மக்கள் தொகைப் பெருக்கத்தை நிலைத்தன்மை அடைய வைப்பது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை திட்டம் 1980 முதல் பின்பற்றப்படுகிறது. இதனால் மக்கள் தொகை அதிகரிப்பது முற்றிலும் தடைப்பட்டு ஆண்-பெண் விகிதாச்சார வித்தியாசம் அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு நந்தா கூறியுள்ளார்.

-இப்னு ஹம்துன்

www.seidhialaigal.com

Leave a Reply

You must be logged in to post a comment.